சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.8 திருவாரூர்
பண் - இந்தளம்
இறைகளோ டிசைந்த இன்பம்
    இன்பத்தோ டிசைந்த வாழ்வு
பறைகிழித் தனைய போர்வை
    பற்றியான் நோக்கி னேற்குத்
திறைகொணர்ந் தீண்டித் தேவர்
    செம்பொனும் மணியுந் தூவி
அறைகழல் இறைஞ்சும் ஆரூர்
    அப்பனே அஞ்சி னேனே.
1
ஊன்மிசை உதிரக் குப்பை
    ஒருபொரு ளிலாத மாயம்
மான்மறித் தனைய நோக்க
    மடந்தைமார் மதிக்கு மிந்த
மானுடப் பிறவி வாழ்வு
    வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
ஆனல்வெள ளேற்ற ஆரூர்
    அப்பனே அஞ்சி னேனே.
2
அறுபதும் பத்தும் எட்டும்
    ஆறினோ டஞ்சு நான்குந்
துறுபறித் தனைய நோக்கிச்
    சொல்லிற்றோன் றாகச் சொல்லார்
நறுமலர்ப் பூவும் நீரும்
    நாடொறும் வணங்கு வார்க்கு
அறிவினைக் கொடுக்கும் ஆரூர்
    அப்பனே அஞ்சி னேனே.
3
சொல்லிடில் எல்லை இல்லை
    சுவையிலாப் பேதை வாழ்வு
நல்லதோர் கூரை புக்கு
    நலமிக அறிந்தே னல்லேன்
மல்லிகை மாடம் நீடு
    மருங்கொடு நெருங்கி யெங்கும்
அல்லிவண் டியங்கும் ஆரூர்
    அப்பனே அஞ்சி னேனே.
4
நரம்பினோ டெலும்பு கட்டி
    நசையினோ டிசைவொன் றில்லாக்
குரம்பைவாய்க் குடியி ருந்து
    குலத்தினால் வாழ மாட்டேன்
விரும்பிய கமழும் புன்னை
    மாதவித் தொகுதி என்றும்
அரும்புவாய் மலரும் ஆரூர்
    அப்பனே அஞ்சி னேனே.
5
மணமென மகிழ்வர் முன்னே
    மக்கள்தாய் தந்தை சுற்றம்
பிணமெனச் சுடுவர் பேர்த்தே
    பிறவியை வேண்டேன் நாயேன்
பணையிடைச் சோலை தோறும்
    பைம்பொழில் விளாகத் தெங்கள்
அணைவினைக் கொடுக்கும் ஆரூர்
    அப்பனே அஞ்சி னேனே.
6
தாழ்வெனுந் தன்மை விட்டுத்
    தனத்தையே மனத்தில் வைத்து
வாழ்வதே கருதித் தொண்டர்
    மறுமைக்கொன் றீய கில்லார்
ஆழ்குழிப் பட்ட போது
    வலக்கணில் ஒருவர்க் காவர்
யாழ்முயன் றிருக்கும் ஆரூர்
    அப்பனே அஞ்சி னேனே.
7
உதிரநீர் இறைச்சிக் குப்பை
    எடுத்தது மலக்கு கைம்மேல்
வருவதோர் மாயக் கூரை
    வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
கரியமால் அயனுந் தேடிக்
    கழலிணை காண மாட்டா
அரியனாய் நின்ற ஆரூர்
    அப்பனே அஞ்சி னேனே.
8
பொய்த்தன்மைத் தாய மாயப்
    போர்வையை மெய்யென் றெண்ணும்
வித்தகத் தாய வாழ்வு
    வேண்டிநான் விரும்ப கில்லேன்
முத்தினைத் தொழுது நாளும்
    முடிகளால் வணங்கு வார்க்கு
அத்தன்மைத் தாகும் ஆரூர்
    அப்பனே அஞ்சி னேனே.
9
தஞ்சொலார் அருள் பயக்குந்
    தமியனேன் தடமு லைக்கண்
அஞ்சொலார் பயிலும் ஆரூர்
    அப்பனை ஊரன் அஞ்சிச்
செஞ்சொலால் நயந்த பாடல்
    சிந்தியா ஏத்த வல்லார்
நஞ்சுலாங் கண்டத் தெங்கள்
    நாதனை நணுகு வாரே.
10
திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.37 திருவாரூர்
பண் - கொல்லி
குருகுபா யக்கொழுங் கரும்புகள் நெரிந்தசா
றருகுபா யும்வயல் அந்தணா ரூரரைப்
பருகுமா றும்பணிந் தேத்துமா றுந்நினைந்
துருகுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.
1
பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்
அறக்கண்என் னத்தகும் அடிகளா ரூரரை
மறக்ககில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே.
2
சூழுமோ டிச்சுழன் றுழலும்வெண் ணாரைகாள்
ஆளும்அம் பொற்கழல் அடிகளா ரூரர்க்கு
வாழுமா றும்வளை கழலுமா றும்மெனக்
கூழுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.
3
சக்கிரவா ளத்திளம் பேடைகாள் சேவல்காள்
அக்கிரமங் கள்செயும் அடிகளா ரூரர்க்கு
வக்கிரமில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உக்கிரமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே.
4
இலைகொள்சோ லைத்தலை இருக்கும்வெண் ணாரைகாள்
அலைகொள்சூ லப்படை அடிகளா ரூரர்க்குக்
கலைகள்சோர் கின்றதுங் கனவளை கழன்றதும்
முலைகள்பீர் கொண்டதும் மொழியவல் லீர்களே.
5
வண்டுகாள் கொண்டல்காள் வார்மணற் குருகுகாள்
அண்டவா ணர்தொழும் அடிகாள ரூரரைக்
கண்டவா றுங்காமத் தீக்கனன் றெரிந்துமெய்
உண்டவா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.
6
தேனலங் கொண்டதேன் வண்டுகாள் கொண்டல்காள்
ஆனலங் கொண்டவெம் மடிகளா ரூரர்க்குப்
பானலங் கொண்டவெம் பணைமுலை பயந்துபொன்
ஊனலங் கொண்டதும் உணர்த்தவல் லீர்களே.
7
சுற்றுமுற் றுஞ்சுழன் றுழலும்வெண் நாரைகாள்
அற்றமுற் றப்பகர்ந் தடிகளா ரூரர்க்குப்
பற்றுமற் றின்மையும் பாடுமற் றின்மையும்
உற்றுமற் றின்மையும் உணர்த்தவல் லீர்களே.
8
குரவநா றக்குயில் வண்டினம் பாடநின்
றரவமா டும்பொழில் அந்தணா ரூரரைப்
பரவிநா டும்மதும் பாடிநா டும்மதும்
உருகிநா டும்மதும் உணர்த்தவல் லீர்களே.
9
கூடுமன் னப்பெடை காள்குயில் வண்டுகாள்
ஆடும்அம் பொற்கழல் அடிகளா ரூரரைப்
பாடுமா றும்பணிந் தேத்துமா றுங்கூடி
ஊடுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.
10
நித்தமா கந்நினைந் துள்ளமேத் தித்தொழும்
அத்தன்அம் பொற்கழல் அடிகளா ரூரரைச்
சித்தம்வைத் தபுகழ்ச் சிங்கடி யப்பன்மெய்ப்
பத்தனூ ரன்சொன்ன பாடுமின் பத்தரே.
11
திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.51 திருவாரூர்
பண் - பழம்பஞ்சுரம்
பத்திமையும் அடிமையையுங் கைவிடுவான் பாவியேன்
பொத்தினநோ யதுவிதனைப் பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினைமா மணிதன்னை வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநாட் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
1
ஐவணமாம் பகழியுடை அடல்மதனன் பொடியாகச்
செவ்வணமாந் திருநயனம் விழிசெய்த சிவமூர்த்தி
மையணவு கண்டத்து வளர்சடையெம் மாரமுதை
எவ்வணம்நான் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
2
சங்கலக்குந் தடங்கடல்வாய் விடஞ்சுடவந் தமரர்தொழ
அங்கலக்கண் தீர்த்துவிடம் உண்டுகந்த அம்மானை
இங்கலக்கும் உடற்பிறந்த அறிவிலியேன் செறிவின்றி
எங்குலக்கப் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
3
இங்ஙனம்வந் திடர்ப்பிறவிப் பிறந்தயர்வேன் அயராமே
அங்ஙனம்வந் தெனையாண்ட அருமருந்தென் ஆரமுதை
வெங்கனல்மா மேனியனை மான்மருவுங் கையானை
எங்ஙனம்நான் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
4
செப்பரிய அயனொடுமால் சிந்தித்துந் தெளிவரிய
அப்பெரிய திருவினையே அறியாதே அருவினையேன்
ஒப்பரிய குணத்தானை இணையிலியை அணைவின்றி
எப்பரிசு பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
5
வன்னாகம் நாண்வரையில் அங்கிகணை அரிபகழி
தன்னாகம் உறவாங்கிப் புரமெரித்த தன்மையனை
முன்னாக நினையாத மூர்க்கனேன் ஆக்கைசுமந்
தென்னாகப் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
6
வன்சயமாய் அடியான்மேல் வருங்கூற்றின் உரங்கிழிய
முன்சயமார் பாதத்தால் முனிந்துகந்த மூர்த்திதனை
மின்செயும்வார் சடையானை விடையானை அடைவின்றி
என்செயநான் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
7
முன்னெறிவா னவர்கூடித் தொழுதேத்தும் முழுமுதலை
அந்நெறியை அமரர்தொழும் நாயகனை அடியார்கள்
செந்நெறியைத் தேவர்குலக் கொழுந்தைமறந் திங்ஙனம்நான்
என்னறிவான் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
8
கற்றுளவான் கனியாய கண்ணுதலைக் கருத்தார
உற்றுளனாம் ஒருவனைமுன் இருவர்நினைந் தினிதேத்தப்
பெற்றுளனாம் பெருமையனைப் பெரிதடியேன் கையகன்றிட்
டெற்றுளனாய்ப் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
9
ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி
மாழையொண்கண் பரவையைத்தந் தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
10
வங்கமலி கடல்நஞ்சை வானவர்கள் தாமுய்ய
நுங்கிஅமு தவர்க்கருளி நொய்யேனைப் பொருட்படுத்துச்
சங்கிலியோ டெனைப்புணர்த்த தத்துவனைச் சழக்கனேன்
எங்குலக்கப் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
11
பேரூரும் மதகரியின் உரியானைப் பெரியவர்தஞ்
சீரூருந் திருவாரூர்ச் சிவனடியே திறம்விரும்பி
ஆரூரன் அடித்தொண்டன் அடியன்சொல் அகலிடத்தில்
ஊரூரன் இவைவல்லார் உலகவர்க்கு மேலாரே.
12
திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.59 திருவாரூர்
பண் - தக்கேசி
பொன்னும் மெய்ப்பொரு ளுந்தரு வானைப்     போக முந்திரு வும்புணர்ப் பானைப் பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்     பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை இன்ன தன்மையன் என்றறி வொண்ணா     எம்மா னைஎளி வந்தபி ரானை அன்னம் வைகும் வயற்பழ னத்தணி     ஆரூ ரானை மறக்கலு மாமே.
1
கட்ட மும்பிணி யுங்களை வானைக்
    காலற் சீறிய காலுடை யானை
விட்ட வேட்கைவெந் நோய்களை வானை
    விரவி னால்விடு தற்கரி யானைப்
பட்ட வார்த்தை படநின்ற வார்த்தை
    வாரா மேதவி ரப்பணிப் பானை
அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை
    ஆரூ ரானை மறக்கலு மாமே.
2
கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானைக்
    கலைக்கெ லாம்பொரு ளாயுடன் கூடிப்
பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானைப்
    பகலுங் கங்குலும் ஆகிநின் றானை
ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை
    உணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை
ஆர்க்கின் றகட லைமலை தன்னை
    ஆரூ ரானை மறக்கலு மாமே.
3
செத்த போதினில் முன்னின்று நம்மைச்
    சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்
வைத்த சிந்தைஉண் டேமனம் உண்டே
    மதிஉண் டேவிதி யின்பயன் உண்டே
முத்தன் எங்கள்பி ரானென்று வானோர்
    தொழநின் றதிமில் ஏறுடை யானை
அத்தன் எந்தைபி ரான்எம்பி ரானை
    ஆரூ ரானை மறக்கலு மாமே.
4
செறிவுண் டேல்மனத் தாற்றெளி வுண்டேல்
    தேற்றத் தால்வருஞ் சிக்கன வுண்டேல்
மறிவுண் டேல்மறு மைப்பிறப் புண்டேல்
    வாணாள் மேற்செல்லும் வஞ்சனை உண்டேல்
பொறிவண் டாழ்செய்யும் பொன்மலர்க் கொன்றைப்
    பொன்போ லுஞ்சடை மேற்புனைந் தானை
அறிவுண் டேஉட லத்துயிர் உண்டே
    ஆரூ ரானை மறக்கலு மாமே.
5
பொள்ளல் இவ்வுட லைப்பொரு ளென்று
    பொருளுஞ் சுற்றமும் போகமும் ஆகி
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம்
    வாரா மேதவிர்க் கும்விதி யானை
வள்ளல் எந்தமக் கேதுணை என்று
    நாள்நா ளும்அம ரர்தொழு தேத்தும்
அள்ள லங்கழ னிப்பழ னத்தணி
    ஆரூ ரானை மறக்கலு மாமே.
6
கரியா னைஉரி கொண்டகை யானைக்
    கண்ணின் மேலொரு கண்ணுடை யானை
வரியா னைவருத் தங்களை வானை
    மறையா னைக்குறை மாமதி சூடற்
குரிய னைஉல கத்துயிர்க் கெல்லாம்
    ஒளியா னைஉகந் துள்கிநண் ணாதார்க்
கரியா னைஅடி யேற்கெளி யானை
    ஆரூ ரானை மறக்கலு மாமே.
7
வாளா நின்று தொழும்அடி யார்கள்
    வான்ஆ ளப்பெறும் வார்த்தையைக் கேட்டும்
நாணா ளும்மலர் இட்டுவணங் கார்
    நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்
கேளா நான்கிடந் தேஉழைக் கின்றேன்
    கிளைக்கெ லாந்துணை யாமெனக் கருதி
ஆளா வான்பலர் முன்பழைக் கின்றேன்
    ஆரூ ரானை மறக்கலு மாமே.
8
விடக்கை யேபெருக் கிப்பல நாளும்
    வேட்கை யாற்பட்ட வேதனை தன்னைக்
கடக்கி லேன்நெறி காணவும் மாட்டேன்
    கண்கு ழிந்திரப் பார்கையி லொன்றும்
இடக்கி லேன்பர வைத்திரைக் கங்கைச்
    சடையா னைஉமை யாளையோர் பாகத்
தடக்கி னானைஅந் தாமரைப் பொய்கை
    ஆரூ ரானை மறக்கலு மாமே.
9
ஒட்டி ஆட்கொண்டு போயொளித் திட்ட
    உச்சிப் போதனை நச்சர வார்த்த
பட்டி யைப்பக லையிருள் தன்னைப்
    பாவிப் பார்மனத் தூறுமத் தேனைக்
கட்டி யைக்கரும் பின்றெளி தன்னைக்
    காத லாற்கடல் சூர்தடிந் திட்ட
செட்டி யப்பனைப் பட்டனைச் செல்வ
    ஆரூ ரானை மறக்கலு மாமே.
10
ஓரூ ரென்றுல கங்களுக் கெல்லாம்
    உரைக்க லாம்பொரு ளாயுடன் கூடிக்
காரூ ருங்கமழ் கொன்றைநன் மாலை
    முடியன் காரிகை காரண மாக
ஆரூ ரைம்மறத் தற்கரி யானை
    அம்மான் றன்றிருப் பேர்கொண்ட தொண்டன்
ஆரூ ரன்னடி நாயுரை வல்லார்
    அமர லோகத் திருப்பவர் தாமே.
11
திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.73 திருவாரூர்
பண் - காந்தாரம்
கரையுங் கடலும் மலையுங்
    காலையும் மாலையும் எல்லாம்
உரையில் விரவி வருவான்
    ஒருவன் உருத்திர லோகன்
வரையின் மடமகள் கேள்வன்
    வானவர் தானவர்க் கெல்லாம்
அரையனி ருப்பதும் ஆரூர்அவர்
    எம்மையும் ஆள்வரோ கேளீர்.
1
தனியனென் றெள்கி அறியேன்
    தம்மைப் பெரிது முகப்பன்
முனிபவர் தம்மை முனிவன்
    முகம்பல பேசி மொழியேன்
கனிகள் பலவுடைச் சோலைக்
    காய்க்குலை ஈன்ற கமுகின்
இனிய னிருப்பதும் ஆரூர் அவர்
    எம்மையும் ஆள்வரோ கேளீர்.
2
சொல்லிற் குலாவன்றிச் சொல்லேன்
    தொடர்ந்தவர்க் குந்துணை அல்லேன்
கல்லில் வலிய மனத்தேன்
    கற்ற பெரும்புல வாணர்
அல்லல் பெரிதும் அறுப்பான்
    அருமறை ஆறங்கம் ஓதும்
எல்லை இருப்பதும் ஆரூர் அவர்
    எம்மையும் ஆள்வரோ கேளீர்.
3
நெறியும் அறிவுஞ் செறிவும்
    நீதியும் நான்மிகப் பொல்லேன்
மிறையுந் தறியும் உகப்பன்
    வேண்டிற்றுச் செய்து திரிவன்
பிறையும் அரவும் புனலும்
    பிறங்கிய செஞ்சடை வைத்த
இறைவன் இருப்பதும் ஆரூர் அவர்
    எம்மையும் ஆள்வரோ கேளீர்.
4
நீதியில் ஒன்றும் வழுவேன்
    நிட்கண் டகஞ்செய்து வாழ்வேன்
வேதியர் தம்மை வெகுளேன்
    வெகுண்டவர்க் குந்துணை ஆகேன்
சோதியிற் சோதிஎம் மானைச்
    சுண்ணவெண் ணீறணிந் திட்ட
ஆதி இருப்பதும் ஆரூர் அவர்
    எம்மையும் ஆள்வரோ கேளீர்.
5
அருத்தம் பெரிதும் உகப்பேன்
    அலவலை யேன்அலந் தார்கள்
ஒருத்தர்க் குதவியேன் அல்லேன்
    உற்றவர்க் குந்துணை அல்லேன்
பொருத்தமே லொன்று மிலாதேன்
    புற்றெடுத் திட்டிடங் கொண்ட
அருத்தன் இருப்பதும் ஆரூர் அவர்
    எம்மையும் ஆள்வரோ கேளீர்.
6
சந்தம் பலஅறுக் கில்லேன்
    சார்ந்தவர் தம்மடிச் சாரேன்
முந்திப் பொருவிடை யேறி
    மூவுல குந்திரி வானே
கந்தங் கமழ்கொன்றை மாலைக்
    கண்ணியன் விண்ணவ ரேத்தும்
எந்தை இருப்பதும் ஆரூர் அவர்
    எம்மையும் ஆள்வரோ கேளீர்.
7
நெண்டிக் கொண்டேயுங் கிலாய்ப்பன்
    நிச்சய மேயிது திண்ணம்
மிண்டர்க்கு மிண்டலாற் பேசேன்
    மெய்ப்பொரு ளன்றி உணரேன்
பண்டங் கிலங்கையர் கோனைப்
    பருவரைக் கீழடர்த் திட்ட
அண்டன் இருப்பதும் ஆரூர் அவர்
    எம்மையும் ஆள்வரோ கேளீர்.
8
நமர்பிறர் என்ப தறியேன்
    நான்கண்ட தேகண்டு வாழ்வேன்
தமரம் பெரிதும் உகப்பன்
    தக்கவா றொன்றும் இலாதேன்
குமரன் திருமால் பிரமன்
    கூடிய தேவர் வணங்கும்
அமரன் இருப்பதும் ஆரூர் அவர்
    எம்மையும் ஆள்வரோ கேளீர்.
9
ஆசை பலஅறுக் கில்லேன்
    ஆரையும் அன்றி உரைப்பேன்
பேசிற் சழக்கலாற் பேசேன்
    பிழைப்புடை யேன்மனந் தன்னால்
ஓசை பெரிதும் உகப்பேன்
    ஒலிகடல் நஞ்சமு துண்ட
ஈசன் இருப்பதும் ஆரூர் அவர்
    எம்மையும் ஆள்வரோ கேளீர்.
10
எந்தை இருப்பதும் ஆரூர்அவர்
    எம்மையும் ஆள்வரோ என்று
சிந்தை செயுந்திறம் வல்லான்
    திருமரு வுந்திரள் தோளான்
மந்த முழவம் இயம்பும்
    வளவயல் நாவலா ரூரன்
சந்தம் இசையொடும் வல்லார்
    தாம்புகழ் எய்துவார் தாமே.
11
திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.83 திருவாரூர்
பண் - புறநீர்மை
அந்தியும் நண்பகலும் அஞ்சுப தஞ்சொல்லி
முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன்
சிந்தை பராமரியாத் தென்றிரு வாரூர்புக்
கெந்தை பிரானாரை யென்றுகொல் எய்துவதே.
1
நின்ற வினைக்கொடுமை நீங்க இருபொழுதுந்
துன்று மலரிட்டுச் சூழும் வலஞ்செய்து
தென்றல் மணங்கமழுந் தென்றிரு வாரூர்புக்
கென்றன் மனங்குளிர என்றுகொல் எய்துவதே.
2
முன்னை முதற்பிறவி மூதறி யாமையினாற்
பின்னை நினைந்தனவும் பேதுற வும்மொழியச்
செந்நெல் வயற்கழனித் தென்றிரு வாரூர்புக்
கென்னுயிர்க் கின்னமுதை என்றுகொல் எய்துவதே.
3
நல்ல நினைப்பொழிய நாள்களில் ஆரூயிரைக்
கொல்ல நினைப்பனவுங் குற்றமும் அற்றொழியச்
செல்வ வயற்கழனித் தென்றிரு வாரூர்புக்
கெல்லை மிதித்தடியேன் என்றுகொல் எய்துவதே.
4
கடுவரி மாக்கடலுட் காய்ந்தவன் தாதையைமுன்
சுடுபொடி மெய்க்கணிந்த சோதியை வன்றலைவாய்
அடுபுலி ஆடையனை ஆதியை ஆரூர்புக்
கிடுபலி கொள்ளியைநான் என்றுகொல் எய்துவதே.
5
சூழொளி நீர்நிலந்தீத் தாழ்வளி ஆகாசம்
வானுயர் வெங்கதிரோன் வண்டமிழ் வல்லவர்கள்
ஏழிசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர்புக்
கேழுல காளியைநான் என்றுகொல் எய்துவதே.
6
கொம்பன நுண்ணிடையாள் கூறனை நீறணிந்த
வம்பனை எவ்வுயிர்க்கும் வைப்பினை ஒப்பமராச்
செம்பொனை நன்மணியைத் தென்றிரு வாரூர்புக்
கென்பொனை என்மணியை என்றுகொல் எய்துவதே.
7
ஆறணி நீண்முடிமேல் ஆடர வஞ்சூடிப்
பாறணி வெண்டலையிற் பிச்சைகொள் நச்சரவன்
சேறணி தண்கழனித் தென்றிரு வாரூர்புக்
கேறணி எம்மிறையை என்றுகொல் எய்துவதே.
8
மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல்
அண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடுந்
திண்ணிய மாமதில்சூழ் தென்றிரு வாரூர்புக்
கெண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே.
9
மின்னெடுஞ் செஞ்சடையான் மேவிய ஆரூரை
நன்னெடுங் காதன்மையால் நாவலர் கோன்ஊரன்
பன்னெடுஞ் சொல்மலர்கொண் டிட்டன பத்தும்வல்லார்
பொன்னுடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே.
10
திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.95 திருவாரூர்
பண் - செந்துருத்தி
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
    பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
    முகத்தால் மிகவாடி
ஆளா யிருக்கும் அடியார் தங்கள்
    அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
    வாழ்ந்து போதீரே.
1
விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன்
    விரும்பி ஆட்பட்டேன்
குற்ற மொன்றுஞ் செய்த தில்லை
    (*)கொத்தை ஆக்கினீர்
எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர்
    நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்
    வாழ்ந்து போதீரே.

(*) விச்சை - வித்தையென்பதுபோல் கொச்சை - கொத்தை என நின்றது.
2
அன்றில் முட்டா தடையுஞ் சோலை
    ஆரூர் அகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த
    காலி யவைபோல
என்றும் முட்டாப் பாடும் அடியார்
    தங்கண் காணாது
குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால்
    வாழ்ந்து போதீரே.
3
துருத்தி உறைவீர் பழனம் பதியாச்
    சோற்றுத் துறையாள்வீர்
இருக்கை திருவா ரூரே உடையீர்
    மனமே எனவேண்டா
அருத்தி யுடைய அடியார் தங்கள்
    அல்லல் சொன்னக்கால்
வருத்தி வைத்து மறுமை பணித்தால்
    வாழ்ந்து போதீரே.
4
செந்தண் பவளந் திகழுஞ் சோலை
    இதுவோ திருவாரூர்
எந்தம் அடிகேள் இதுவே ஆமா
    றுமக்காட் பட்டோர்க்குச்
சந்தம் பலவும் பாடும் அடியார்
    தங்கண் காணாது
வந்தெம் பெருமான் முறையோ வென்றால்
    வாழ்ந்து போதீரே.
5
தினைத்தா ளன்ன செங்கால் நாரை
    சேருந் திருவாரூர்ப்
புனைத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப்
    புரிபுன் சடையீரே
தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து
    தங்கண் காணாது
மனத்தால் வாடி அடியார் இருந்தால்
    வாழ்ந்து போதீரே.
6
ஆயம் பேடை அடையுஞ் சோலை
    ஆரூர் அகத்தீரே
ஏயெம் பெருமான் இதுவே ஆமா
    றுமக்காட் பட்டோர்க்கு
மாயங் காட்டிப் பிறவி காட்டி
    மறவா மனங்காட்டிக்
காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால்
    வாழ்ந்து போதீரே.
7
கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க்
    கலந்த சொல்லாகி
இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை
    இகழா தேத்துவோம்
பழிதா னாவ தறியீர் அடிகேள்
    பாடும் பத்தரோம்
வழிதான் காணா தலமந் திருந்தால்
    வாழ்ந்து போதீரே.
8
பேயோ டேனும் பிரிவொன் றின்னா
    தென்பர் பிறரெல்லாங்
காய்தான் வேண்டிற் கனிதா னன்றோ
    கருதிக் கொண்டக்கால்
நாய்தான் போல நடுவே திரிந்தும்
    உமக்காட் பட்டோர்க்கு
வாய்தான் திறவீர் திருவா ரூரீர்
    வாழ்ந்து போதீரே.
9
செருந்தி செம்பொன் மலருஞ் சோலை
    இதுவோ திருவாரூர்
பொருந்தித் திருமூ லத்தா னம்மே
    இடமாக் கொண்டீரே
இருந்தும் நின்றுங் கிடந்தும் உம்மை
    இகழா தேத்துவோம்
வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால்
    வாழ்ந்து போதீரே.
10
காரூர் கண்டத் தெண்டோள் முக்கண்
    கலைகள் பலவாகி
ஆரூர்த் திருமூ லத்தா னத்தே
    அடிப்பே ராரூரன்
பாரூர் அறிய என்கண் கொண்டீர்
    நீரே பழிப்பட்டீர்
வாரூர் முலையாள் பாகங் கொண்டீர்
    வாழ்ந்து போதீரே.

(*) சுந்தரர் காஞ்சீபுரத்தில் 'ஆலந்தான்' என்னும் பதிகமோதி ஒரு கண் பெற்று, இந்தத்தலத்தில் இப்பதிகமோதி மற்றொரு கண்ணும் பெற்றார்.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com